வாரணாசி,
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, பிரதமர் மோடி நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசியை சேர்ந்த பா.ஜனதா செயல்வீரர்களுடன் உரையாடினார்.
தனது பெயரிலான நமோ செயலியில் ஆடியோ மூலம் அவர் உரையாடினார். காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் விரிவாக்கம்தான் ஆலோசனையில் பெரும்பகுதியை பிடித்தது.
பெண்கள் அதிகாரம், உள்கட்டமைப்பு, சுகாதார மேம்பாடு ஆகிய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பா.ஜனதா உறுதி பூண்டிருப்பதாக அவர் கூறினார்.
ஒரு தொண்டருடன் உரையாடும்போது, மத்திய அரசின் நலத்திட்டங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்குமாறு மோடி அறிவுறுத்தினார். குறிப்பாக, ரசாயன கலப்படமற்ற உரம் பற்றி எடுத்துரைக்குமாறு கூறினார்.
மத்திய அரசின் திட்டங்களால் வாரணாசி பெருமளவு பலன் அடைந்திருப்பதாக மோடி கூறினார். மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பா.ஜனதா தொண்டர்கள் குறித்து நமோ செயலியில் கமல் புஷ்ப் என்ற சிறப்பு பகுதி இருப்பதாகவும், அதில் இடம்பெறும்வகையில் தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டார்.
மேலும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் சிறியஅளவில் நன்கொடை திரட்டும் பா.ஜனதா பிரசாரம் பற்றியும் பிரதமர் மோடி கூறினார்.