புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.
இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளரான அஜய் மக்கான் கூறுகையில், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் காங்கிரசும், அதன் தொண்டர்களும் ஆதரவளிப்பார்கள். தடுப்பு நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வை பரப்புவதற்கு நாங்கள் உதவி செய்வோம். அதைப்போல தேவைப்பட்டால் எந்தவித அவசர பணிகளையும் ஒருங்கிணைப்போம் என்று தெரிவித்தார்.
நாடு முழுவதும் இந்த வைரசுக்கான பரிசோதனை வசதிகளை அதிகரித்து, அதிக பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்ட அஜய் மக்கான், இந்த வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் தடையின்றி கிடைக்க வசதிகளை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.