டெல்லி,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட 787 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும், பல்வேறு நாடுகள் தங்கள் வான்பரப்பை மூடியுள்ளன.
இதனிடையே, மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், அரபு நாடுகளான ஓமன், குவைத் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஓமன் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தரிக் மற்றும் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் கலீத் அல் ஹமத் அல் முபாரக் ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம், இந்நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினார்.