காந்திநகர்,
குஜராத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா 6-வது முறையாக ஆட்சியை பிடித்தது. குஜராத் முதல் மந்திரியாக விஜய் ரூபானி 2-வது முறையாக பதவி ஏற்றுக்கொண்டார். துணை முதல் மந்திரியாக நிதின் படேல் பதவியேற்றார். 18 மந்திரிகளும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். விஜய் ரூபானி தலைமையிலான மந்திரி சபைக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முன், பிரதமர் மோடி, தனது தாயார் ஹீராபென்மோடியை சந்தித்து ஆசி பெற்றார்.
விமான நிலையத்தில் இருந்து ஆதரவாளர்கள் வெள்ளத்தில் மிதந்தபடி சென்ற பிரதமர் மோடி, ரைசானில் உள்ள இல்லத்திற்கு சென்று ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெற்றார். சிறிது நேரம் தனது தாயாருடன் நேரத்தை செலவிட்ட பிரதமர் மோடி, பின்னர் கவர்னர் மாளிகை புறப்பட்டு சென்றார். விஜய் ரூபானி முதல் அமைச்சராக பதவியேற்ற நிகழ்ச்சியில், பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் 18 மாநிலங்களின் முதல்வர்களும் கலந்து கொண்டனர்.