புது டெல்லி,
கொரோனா தடுப்பூசிகள் குறைவான அளவில் செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். ஜி-20 மாநாடு முடிந்து திரும்பியதும், தடுப்பூசி சதவீதம் குறைவாக செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களின், மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் மோடி பங்கேற்கிறார்.
அந்த கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. நவம்பர் -3ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
50% முதல் தவணை தடுப்பூசி மற்றும் குறைந்த அளவிளான இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.
அதன்படி, ஜார்க்கண்ட், மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலபிரதேசம், மராட்டியம், மேகாலயா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள 40க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றன. மேற்கண்ட மாநில முதல்-மந்திரிகளுடன் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இதுவரை இந்தியாவில் 106 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 68 லட்சத்து 4 ஆயிரத்து 806 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் தடுப்பூசி போடுவதற்கு வயது வந்தோரில் தகுதியானவர்களாக 94 கோடி பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 32 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.