புதுடெல்லி,
பிரதமர் மோடி நேற்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சமீபத்தில் நடந்த இந்தியா-ஐரோப்பிய கூட்டமைப்பு சந்திப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அப்போது, இரு தரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் பிரதமர் மோடியும், மேக்ரானும் பேசினர். சீரான மற்றும் விரிவான தடையற்ற வர்த்தகம் மற்றும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய இணைப்புக்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்புகள் வரவேற்கத்தக்க படிகள் என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.
இந்த உரையாடலின் போது, இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பிரான்ஸ் அளித்த உதவிகளுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அத்துடன் சூழ்நிலை அனுமதிக்கும்போது விரைவில் இந்தியா வருமாறு மேக்ரானுக்கு அவர் அழைப்பும் விடுத்தார்.