போபால்,
தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணி திட்டம் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 26-ம் தேதி இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுடனும் அவர் பேசினார்.
இந்நிலையில், சென்ட்ரல் விஸ்டா பணிகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தது குறித்து காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்து வருகிறது.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய சிங் நேற்று கூறுகையில், 250 ஆண்டுகால இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நமது நாடாளுமன்ற கட்டிடம் நல்ல நிலையில் உள்ளது, ஆனால், யாரையும் கலந்து ஆலோசிக்காமல், டெண்டர் விடாமல் சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். போட்டோ எடுப்பதற்காக பிரதமர் மோடி சென்ட்ரல் விஸ்டா பணிகள் நடைபெறும் பகுதிக்கு சென்றுள்ளார் என்றார்.