டேராடூன்,
உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் இம்மாதம் நடக்கிறது. இதையொட்டி, அங்குள்ள ஹரித்துவார் மாவட்டம் மங்களார் நகரில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.
அவர் பேசியதாவது:-
உத்தரகாண்டில் பா.ஜனதா தனது முதல்-மந்திரிகளை தொடர்ந்து மாற்றி வருகிறது. ஏனென்றால் அவர்கள் அனைவரும் திருடர்கள். ஒரு திருடனை மாற்றி விட்டு இன்னொரு திருடனை நியமிக்கிறார்கள்.
ஆனால், காங்கிரஸ் கட்சி, ஏழைகளின், வேலைவாய்ப்பற்றவர்களின் அரசாங்கத்தை அமைக்க விரும்புகிறது. டெல்லியில் உட்கார்ந்து கொண்டு மன்னர் ஆளும் ஆட்சியை அல்ல.
பிரதமர் மோடி சமீபத்தில் அளித்த பேட்டியில், அவர் சொல்வதை நான் கவனிப்பது இல்லை என்று சொல்லி உள்ளார். அது உண்மைதான். ஏனென்றால் அவரை பார்த்தோ, அவரது சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பார்த்தோ நான் பயப்படுவது இல்லை.
விவசாயிகளாலும், காங்கிரசாலும்தான் 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன. மோடியை எதிர்க்க காங்கிரசால் மட்டுமே முடியும்.
கடந்த 70 ஆண்டுகளில் நாட்டில் ஒன்றுமே நடக்கவில்லை என்று மோடி பேசும்போது அவரது ஆணவம் தெரிகிறது. அவரது ஆணவம் வேடிக்கையாக இருக்கிறது.
70 ஆண்டுகளாக நாடு தூங்கிக் கொண்டிருந்துவிட்டு, அவர் பதவிக்கு வந்தவுடன் விழித்துக் கொண்டது என்று சொல்கிறாரா? அப்படியானால் சாலைகள், ரெயில் தண்டவாளங்கள் மந்திரத்தால் வந்ததா? என்று அவர் பேசினார்.