கேதர்நாத்,
பிரதமர் மோடி இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் வருகை தந்தார். காலை 8.30 மணிக்கு டோராடூன் விமான நிலையம் வந்த மோடியை உத்தரகண்ட் ஆளுநர் கே.கே.பால், மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உயரதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து, அங்கிருந்து அவர் கேதார்நாத் கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியுடன் ஆளுநரும், முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் உடன் சென்றனர்.
கேதர்நாத் கோவில் சென்ற பிரதமர் மோடி, அங்கு வழிபட்டார். பிரதமர் மோடி கோவில் வந்ததும் அவரைக்காண ஆயிரக்கணக்கான பாஜகவினர் கோவில் முன் திரண்டனர்.
பிரதமர் வருகையையொட்டி, டேராடூன், கேதார்நாத் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமரின் வருகையை முன்னிட்டும், தீபாவளிப் பண்டிகையையொட்டியும் கேதார்நாத் கோயில் பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி அவர் பிரதமர் மோடி இக்கோயிலில் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.