கொல்கத்தா,
வங்கக்கடலில் உருவான யாஸ் புயல், அதி தீவிர புயலாக வலுப்பெற்று, ஒடிசா மாநிலம் பாத்ரக் மாவட்டம் தாம்ரா துறைமுகம் அருகே நேற்று முன்தினம் கரையை கடந்தது.
புயல் கரை கடந்தபோது மணிக்கு 130 கிமீ முதல் 140 கிமீ வரை வேகத்தில் சூறைக்காற்று சுழன்று அடித்தது. யாஸ் புயல் ஒடிசா, மேற்கு வங்காளத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
புயலுக்கு 4 பேர் பலியானார்கள். ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில், யாஷ் புயலால் மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். விமானம் மூலம் ஒடிசா மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு புயல் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்வதற்கான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி ஒடிசாவில் யாஸ் புயாலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார்.
ஒடிசாவையடுத்து மேற்குவங்காளத்திலும் புயல்பாதிப்புகளை பிரதமர் மோடி ஆய்வு செய்ய உள்ளார். புயல் பாதிப்பு தொடர்பாக மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜியையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.