மண்டியா:-
சுமலதா எம்.பி.யின் மகன்
மண்டியா நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் நடிகை சுமலதா. இவர் மறைந்த நடிகரும், முன்னாள் மத்திய-மாநில மந்திரியுமான அம்பரீசின் மனைவி ஆவார். இவர்களது மகன் அபிஷேக். சமீபத்தில் அபிஷேக்கிற்கும், அவிவா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக மண்டியா மாவட்ட மக்களுக்கு நடிகை சுமலதா எம்.பி. விருந்து வழங்க முடிவு செய்தார்.
இதற்கான விருந்து நிகழ்ச்சி மத்தூர் தலுகா கெஜ்ஜலகெரே காலனி அருகே சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இடத்தில் நடந்தது. இதற்காக அங்கு தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. ஆயிரம் ஆடுகள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டு கறிவிருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
சுமலதா மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பேனர்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்தன. மேலும் பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. சைவம், அசைவம் என்று மக்களுக்கு கமகமவென உணவுகள் பரிமாறப்பட்டது. அபிஷேக்கும் நேரடியாக பந்தலுக்கு வந்து மக்களுக்கு விருந்து பரிமாறினார். விருந்தில் கலந்து கொண்ட மக்கள் மணமக்களை வாழ்த்தி சென்றனர். இந்த விருந்தில் மண்டியா மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து பங்கேற்றனர்.
விருந்து ஒருபுறம் நடந்து கொண்டிருக்க அசைவ பிரியர்கள் கறிவிருந்தில் பங்கேற்க வேண்டுமென முண்டியடித்தனர். ஆயிரக்கணக்கானோர் கறி விருந்து நடத்தப்பட்ட இடத்தில் குவிந்தனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் ஒரு கட்டத்தில் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
போலீஸ் தடியடி
நடிகர் அபிஷேக் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கேட்டுக் கொண்டும் அசைவ பிரியர்கள் அடங்கவில்லை. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து அங்கு குவிந்திருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மேலும் அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஒரு பகுதி பந்தலையும் இடித்து தள்ளிக்கொண்டு மக்கள் ஓடினர். இதனால் அந்த பகுதி பந்தல் சரிந்தது. போலீசாரின் தடியடியில் 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயம் அடைந்தனர். அதுபோல் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முயன்ற போலீசாரும் சிலரும் காயம் அடைந்தனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்தது. அதையடுத்து அமைதியாக பந்தி நடந்தது.