போபால்,
மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் மதுபான லாரி மோதிய விபத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலியானார்.
மத்தியபிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் பலியானது குறித்து 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே அதே மாவட்டத்தின் இந்தூர்-பேடுல் நெடுஞ்சாலையில் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், காடேகான் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திலீப் புரி அங்கு சென்றார்.
சாலையோர உணவகம் அருகே ஒரு லாரி நீண்ட நேரமாக நிற்பதை அறிந்து, அதன் டிரைவரிடம் விசாரிக்க முயன்றார். உடனே டிரைவர் லாரியை வேகமாக இயக்கி தப்பிக்க முயன்றார். அதில் பின்பக்க சக்கரம், திலீப் புரி மீது ஏறியது. அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.
இதற்கிடையே, லாரியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பிச்சென்றார். லாரியை போலீசார் சோதனையிட்டபோது, 1,800 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது. அதை அவர்கள் பறிமுதல் செய்தனர்.