திருவனந்தபுரம்,
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 19-ந் தேதி அம்மனுக்கு தொடங்கியது. காலை 9.45 மணிக்கு மேல் சாந்தி பிரம்மஸ்ரீ ஈஸ்வரன் நம்பூதிரி காப்பு கட்டி விழாவை தொடங்கி வைத்தார்.
விழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு பள்ளி உணர்த்தல், 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு அபிஷேகம், 6 மணிக்கு தீபாராதனை, 6.40 மணிக்கு உஷ பூஜை, 7.15 மணிக்கு களபாபிஷேகம், 8.30 மணிக்கு பந்தீரடி பூஜை, 11.30 மணிக்கு உச்ச பூஜை, மதியம் 1 மணிக்கு நடை அடைப்பு, மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறப்பு, 6.45 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு அத்தாள பூஜை, இரவு 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு வந்தது.
விழாவின் சிகரமான பொங்கல் வழிபாடு நேற்று காலை 10.50 மணிக்கு தொடங்கியது. ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் தந்திரி பரமேஸ்வரன் வாசுதேவன் பட்ட திரிப்பாடு கோவில் கருவறை விளக்கில் இருந்து தீபம் எடுத்து வர, கோவிலின் முன் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பண்டார அடுப்பில் தீயை பற்ற வைத்து பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, அவரவர் வீடுகளில் பெண்கள் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தினர். கொரோனா கட்டுப்பாடு காரணமாக சுகாதார துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீஸ் துறையின் வேண்டுகோளின் படி பெண்கள் அவரவர் வீடுகளின் முற்றத்திலும் வீட்டு தோட்டங்களிலும் பொங்கல் படைத்தனர்.
வழக்கமாக பொங்கள் விழாவையொட்டி கோவில் பகுதியில் பல்வேறு இடங்களில் இருந்து வந்து உறவினர்கள், நண்பர்களும் பொங்கல் படைப்பார்கள். ஆனால் இந்த முறை எளிமையாக நடந்தது. அதாவது, அவரவர் வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொங்கல் படைத்தனர். ஆதலால் சாலைகள், தெரு வீதிகள் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெறிச்சோடி கிடந்தன.
விழா நாட்களில், நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெறும் குருதி தர்ப்பணத்துடன் பொங்கல் விழா நிறைவு பெறுகிறது.