புவனேஸ்வர்,
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வரும் நிலையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தி வருகின்றன. சில மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து ஒடிசா மாநிலத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.