புதுடெல்லி
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது பதவிக்காலத்தை நிறைவு செய்ய உள்ளார்.
இந்தநிலையில், கடந்த மாதம் அவர் 2 பேரது கருணை மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் 2012ம் ஆண்டு, 4 வயது பெண் குழந்தை கற்பழித்து கொல்லப்பட்ட கொடூர வழக்கில் ஜிதேந்திரா என்ற ஜீது, பாபு என்ற கேட்டன், சன்னி என்ற தேவேந்திரா ஆகிய 3 பேருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை மத்திய பிரதேச ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.
இவர்கள் தாக்கல் செய்த கருணை மனுவை கடந்த மாதம் 25ந் தேதி நிராகரித்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மராட்டிய மாநிலம் புனேயில், 2007ம் ஆண்டு, 22 வயது பெண் ஒருவர் கற்பழித்து, கொல்லப்பட்ட வழக்கில் வாடகைக்கார் டிரைவர் புருசோத்தம் தஷ்ரத் பொராட்டே, பிரதீப் யஷ்வந்த் கொகாடே ஆகிய 2 பேருக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மும்பை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன.
இவர்களின் கருணை மனுவை நிராகரித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 26ந் தேதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த 2 கருணை மனுக்களையும் சேர்த்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது 5 ஆண்டு பதவிக்காலத்தில் 30 கருணை மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.