புதுடெல்லி,
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த வாரம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த 10ம் தேதி அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூளை அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, 84 வயதான அவர் தொடர்ந்து கோமாவில் இருந்து வருகிறார். அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர்கள், அவரது முக்கிய மற்றும் மருத்துவ அளவுருக்கள் நிலையாக உள்ளதாகவும், தொடர்ந்து அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் பிரணாப்புக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து தனது தந்தை பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளது என அவரது மகன் அபிஜித் முகர்ஜி இன்று காலை தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் மேலும் மோசமடைந்துள்ளதாக ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு புதிதாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.