புதுடெல்லி,
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குளியலறையில் தவறி விழுந்ததால், அவரது மூளையில் ஏற்பட்ட ரத்தக்கட்டி கடந்த 10-ந்தேதி டெல்லி ராணுவ ஆர்.ஆர். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்து கோமாவுக்கு சென்ற பிரணாப் முகர்ஜி, தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. முன்னதாக அவர் கொரோனா தொற்றாலும் பாதிக்கப்பட்டு இருந்தது பரிசோதனையில் தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையை பொறுத்தவரை, அவர் தொடர்ந்து ஆழ்ந்த கோமாவில்தான் இருக்கிறார். உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவருக்கு சிறுநீரக செயலிழப்பு மற்றும் நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பிரணாப் முகர்ஜி தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் உதவியில் இருப்பதாக கூறியுள்ள டாக்டர்கள், அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தனர்.