சூரத்,
சூரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரவீண் தொகாடியா, காரில் நேற்று சென்று கொண்டிருந்தார். சூரத் மாவட்டம், காம்ரேஜ் அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்புறம் வேகமாக வந்த லாரி ஒன்று, கார் மீது மோதியது.
இதையடுத்து, சாலையில் இருக்கும் குறுக்கு சுவரின் மீது அந்த லாரி மோதி நின்றுவிட்டது. இந்த விபத்தில், பிரவீண் தொகாடியாவும், அவருடன் காரில் பயணித்த இன்னொரு நபரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து பிரவீண் தொகாடியா செய்தியாளர்களிடம் கூறியதாவது
நான் பயணித்த கார், புல்லட் புரூப் வசதி கொண்டது. இந்த வசதி மட்டும் எனது காரில் இல்லாமல் இருந்திருந்தால், நான் உயிரிழந்திருப்பேன். எனக்கு வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. காந்திநகரில் இருந்து வந்த உத்தரவுகளின்படி, இந்த மாற்றம் நடந்துள்ளது என பிரவீன் தொகாடியா தெரிவித்தார். விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்ததோடு அதன் ஓட்டுநரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.