அலகாபாத்,
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவீண் தொகாடியா கடந்த 2015ம் ஆண்டில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக அவரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ராஜஸ்தான் போலீசார் 15-ம் தேதி காலை அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் தொகாடியா வீட்டில் இல்லை. இதனால் போலீசார் திரும்பி சென்றனர். அவருடைய ஆதரவாளர்கள் தரப்பில் தொகாடியா கைது செய்யப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. போலீஸ் இல்லையென மறுத்தது. இதனையடுத்து காணாமல் போன தொகாடியாவை தேடுவதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. 11 மணியளவில் ஆட்டோ ஒன்றில் கிளம்பி சென்றபின் அவரை காணவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மறுநாள் காலையில் மருத்துவமனை ஒன்றில் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இதனையடுத்து பேசிய அவர், ராமர் கோவில் விவகாரத்தில் என்னுடைய குரலை ஒடுக்கவும், என்னை கொல்லவும் சதிதிட்டம் நடக்கிறது, சரியான நேரத்தில் என்னை கொலை செய்ய சதிதிட்டம் தீட்டியவர்கள் யார் என்பதையும் தெரிவிப்பேன் என்றார்.
பிரவீன் தொகாடியாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா பதில் அளிக்கவேண்டும் என்று சிவசேனா வலியுறுத்தியது.
காணாமல் போனது மற்றும் குற்றச்சாட்டு ஆகியவற்றை அடுத்து விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவர் பதவியில் இருந்து பிரவீன் தொகாடியாவை நீக்க முயற்சி நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும், சொல்லும்படியாக அமையவில்லை. இதற்கிடையே பிரதமர் மோடி - தொகாடியா இடையே யார் வலியவர் என்பது தொடர்பாக நீண்ட காலமாக போட்டி நிலவுகிறது. குஜராத் தேர்தலின் போது விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவின் தொகாடியா சரியான முறையில் பிரசாரம் மேற்கொள்ளவில்லை.
இதனால் பாரதீய ஜனதா கட்சியின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் பதவியை இழக்க கூடும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கூறிஉள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தன்னை என்கவுண்டரில் கொல்லை முயற்சி நடைபெற்றது என குற்றம் சாட்டிய தொகாடியா ஆமதாபாத் காவல் துறையில் புகாரை தெரிவித்தார். இருப்பினும் இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் அவரை எப்படி என்கவுண்டரில் கொல்ல முடியும்? என பதில் கேள்வியுடன் அவருடைய குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது. தொகாடியா மாயமான அன்று அவர் சொகுசு காரில் சென்ற சிசிடிவி காட்சிகளையும் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை தொடரும் நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற விஎச்பி சாதுக்களின் கூட்டத்தில் தொகாடியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. அவர் காணாமல் போன விவகாரம் தொடர்பாக சில நிர்வாகிகள் பேச முயற்சி செய்தபோது, நேரமில்லை என சாதுக்கள் தரப்பில் மறுக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட குழுவில் இடம்பெற்று உள்ள நிர்வாகி ஒருவர் பேசுகையில், மத்திய மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரவீன் தொகாடியா தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என கூறிஉள்ளார். தொகாடியாக ஒழுங்கின்மை நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார், அவர் வெளியேறுவதற்கான வழி காண்பிக்கப்படும், என விஸ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த சுவாமி சின்மையானந்த் கூறிஉள்ளார் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டு உள்ளது.
விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் முக்கியத்துவத்தை தொகாடியா இழுந்துவிட்டார் எனவும் உயர்மட்ட நிர்வாகிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
பிரவின் தொகாடியாவை ஒதுக்குவதில் அமைப்பை சேர்ந்த பலருக்கும் மகிழ்ச்சியைதான் தருகிறது. அவருடைய சமீபத்திய நடவடிக்கையானது அவர் ஒழுங்கின்மை நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரமாகும். விஎச்பியில் அவர் இனியும் சகித்துக்கொள்ளப்பட மாட்டார், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பில் தொகாடியாவிற்கு இப்போது எந்தஒரு தொடர்பும் கிடையாது, எனவும் சின்மையானந்த் குறிப்பிட்டு உள்ளார்.