ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்டு 5-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. இதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் வெடித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
இந்த கட்டுப்பாடுகள் பின்னர் படிப்படியாக விலக்கிக்கொள்ளப்பட்டன. மசூதிகளில் மக்கள் தொழுகைக்கும் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற ஜாமியா மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்கப்படவில்லை. 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த மசூதியை சுற்றி தடுப்பு வேலிகள் போடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக ஜாமியா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த தொழுகையில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் 1,000 பேர் பங்கேற்றனர். ஆனாலும் வெளி நபர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மசூதி மற்றும் ஸ்ரீநகர் முழுவதும் நேற்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.