நாசிக்,
நாசிக் மாவட்டம் தான்ஷேட் கிராமத்தில் 8 மாத கர்ப்பமாக இருந்த 23 வயது இளம்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஹர்சூல் பகுதியில் உள்ள ஊரக மருத்துவமனையின் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், ஆண்குழந்தையை பெற்றெடுத்தார். குறைமாதத்தில் குழந்தை பிறந்ததால், உடனடியாக தாயும், சேயும் நாசிக் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு குழந்தை சிறப்பு பிரிவில் வைத்து பராமரிக்கப்பட்டது.
மேலும், குழந்தைக்கு செயற்கை சுவாசம் (வெண்டிலேட்டர்) அளிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது. சிவில் மருத்துவமனையில் இந்த வசதி இல்லாததால், அத்காவ் பகுதியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டனர். துரதிருஷ்டவசமாக, அங்கேயும் வெண்டிலேட்டர் வசதி இல்லை. இதனால், தாயும், சேயும் மீண்டும் நாசிக் சிவில் மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தையை அனுமதித்து செயற்கை சுவாசம் அளிக்க சிவில் மருத்துவமனை டாக்டர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, தாயும், சேயும் ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
எனினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக இறந்துபோனது. இந்த சம்பவம் நாசிக்கில் பெரும் அதிர்ச்சி, சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
நாசிக் சிவில் மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை 187 குழந்தைகள் பலியாகி இருக்கின்றனர். இதில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 55 குழந்தைகள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டுவருவதால் உயிரிழப்பு நேரிடுகிறது என டாக்டர் ஜாக்தாலே கூறுகிறார். குறைமாதத்தில் குழந்தை பிறப்பு, நுரையிரல் பலவீனம் ஆகியவை உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.