தேசிய செய்திகள்

கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார்: மத்திய அரசின் மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை

நிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். மத்திய அரசின் மேல்முறையீடு மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நிர்பயா கொலை குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி நேற்று தள்ளுபடி செய்தார். இதற்கிடையே குற்றவாளிகளை தூக்கில் போட டெல்லி கோர்ட்டு விதித்த தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அந்த மனு விடுமுறைநாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. அதனை தொடர்ந்து குற்றவாளிகள் கருணை மனுவை 4 பேரையும் பிப்ரவரி 1-ந்தேதி(அதாவது நேற்று) தூக்கில் போடமுடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் கடந்த வாரம் வினய் குமார் சர்மா தரப்பில் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை காரணம் காட்டியும் அக்ஷய குமார் சிங், பவன்குப்தா ஆகியோர் தரப்பில் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்வதாகவும் இதனால் தங்களை தூக்கில் போடுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூடுதல் செசன்சு கோர்ட்டில் அக்ஷய குமார் சிங், பவன்குப்தா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த டெல்லி கோர்ட்டு 4 குற்றவாளிகளையும் அடுத்த உத்தரவு வரை தூக்கில் போடுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனால் நேற்று இந்த குற்றவாளிகளை தூக்கில்போடுவது ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் வினய் குமார் சர்மா தரப்பில் தாக்கல் செய்த கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நிராகரித்து உள்ளார்.

இந்த நிலையில், தூக்கிலிட தடை விதித்த டெல்லி கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி ஐகோர்ட்டில் நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நேற்று அவசர வழக்காக எடுத்து டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி சுரேஷ்குமார் கயித் அமர்வில் விசாரிக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதம் செய்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதி, சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் மற்றும் 4 குற்றவாளிகளும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை இன்று (ஞாயிறு) ஒத்தி வைத்தார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை