புதுடெல்லி,
நமது நாட்டில் அரசியல் சாசன சட்டம் 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்த நாள், ஆண்டுதோறும் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் 71-வது குடியரசு தின விழா நேற்று (ஞாயிற்றுக் கிழமை) வழக்கமான உற்சாகத்துடனும், எழுச்சியுடனும், கோலாகலத்துடனும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியிலும் ராஜபாதையில் குடியரசு தினவிழா கண்கவர் அணி வகுப்புடன் வண்ண மயமாக நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, வழக்கத்துக்கு மாறாக அமர்ஜவான் ஜோதியில் மரியாதை செலுத்துவதற்கு பதிலாக, இந்தியா கேட் அருகே அமைந்துள்ள போர் நினைவுச்சின்னத்துக்கு வந்து, நாட்டுக்காக தங்கள் இன்னுயிர் நீத்த படை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவருடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைத்தளபதிகள் இருந்தனர்.
40 ஏக்கர் நில பரப்பிலான இந்த போர் நினைவுச்சின்னமானது, 1962-ம் ஆண்டு நடந்த இந்திய-சீனப்போர், 1947, 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர். 1999-ம் ஆண்டு நடந்த கார்கில் போர் உள்ளிட்டவற்றில் உயிர் நீத்த இந்திய வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டதாகும்.
போர் நினைவுச்சின்னத்தில் மரியாதை செலுத்திவிட்டு பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுவதற் காக ராஜபாதையில் அமைக் கப்பட்டிருந்த பிரத்யேக மேடைக்கு வந்தார். வரும்வழியில் அவர் பார்வையாளர்களை நோக்கி உற்சாகத்துடன் கையசைத்துக்கொண்டே வந்தார். தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வந்து சேர்ந்தார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனரோ கலந்து கொண்டார். அந்த நாட்டின் அதிபர் ஒருவர் இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்டது இது மூன்றாம் முறை.
குடியரசு தினவிழாவின் சிறப்பு அம்சம், நமது நாட்டின் முப்படைகளின் வலிமையை உலகத்துக்கு பறைசாற்றுகிற வகையில் அணிவகுப்பு நடைபெற்றதுதான். இந்த அணிவகுப்பில் முதல் முறையாக சினூக், அபாச்சி ஹெலிகாப்டர்கள் இடம் பெற்றன.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் சார்பில் ஏ-சாட் என்று அழைக்கப்படுகிற செயற்கை கோள் தடுப்பு ஆயுத அமைப்பும், இந்த அணிவகுப்பில் முதல்முறையாக இடம் பெற்றது. எதிரிநாட்டின் செயற்கை கோளால் ஆபத்து வந்தாலும் அதை எதிர்த்து நின்று சமாளிக்கிற ஆற்றல் இந்தியாவுக்கு உண்டு என்று இது எடுத்துக் காட்டுவதாக அமைந்தது.
பஞ்சாப் மாநிலத்தின் அலங்கார ஊர்தி, சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவின் 550-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தை உலகுக்கு காட்டுவதாக அமைந்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் யூனியன் பிரதேசமாக முதல் முறையாக அணிவகுப்பில் கலந்து கொண்டது.
இதனால் எந்தவித அசம்பாவிதமும் இன்றி குடியரசு தின விழா, கோலாகலமாக நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.
அலங்கார ஊர்திகள்
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில், மாநிலங்கள் சார்பில் 16 அலங்கார ஊர்திகளும், மத்திய அமைச்சகங்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புத்துறை சார்பில் 6 அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன. யூனியன் பிரதேசம் என்ற முறையில், காஷ்மீர் முதல்முறையாக இடம்பெற்றது.
தவளையை காப்போம் என்ற பொருளில் கோவா மாநில ஊர்தியும், காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்ப வலியுறுத்தும் கிராமத்துக்கு திரும்புவோம் என்ற பொருளில் காஷ்மீர் ஊர்தியும் அமைந்திருந்தன.
அணிவகுப்பில், தனுஷ் பீரங்கி இடம்பெற்றது. அது, முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டது ஆகும். 36 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கை தாக்கவல்லது.
சினூக், அபாச்சி ஹெலிகாப்டர்கள்
குடியரசு விழா அணிவகுப்பின்போது, வானில் சாகசம் நிகழ்த்திக் காட்டிய ஹெலிகாப்டர்களில், சினூக், அபாச்சி ஆகியவையும் அடங்கும். சமீபத்தில்தான், இவை இரண்டும் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன.
இவற்றில், அபாச்சி, தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர் ஆகும்.
டூடுல் வெளியிட்ட கூகுள்
இந்திய குடியரசு தினத்தையொட்டி, கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் விசேஷ டூடுல் வெளியிட்டது.
தாஜ்மகால், இந்தியா கேட் உள்பட இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களையும், தேசிய விலங்கு, பறவை, பாரம்பரிய கலைகள், உடை ஆகியவற்றையும் குறிக்கும்வகையில், டூடுல் அமைந்திருந்தது.
காவி நிற தலைப்பாகையில் மோடி
சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி வெவ்வேறு வண்ணங்களில் தலைப்பாகை அணிவது வழக்கம். அதுபோல், நேற்று வழக்கமான பைஜாமா, குர்தா, சட்டையுடன் காவி நிற தலைப்பாகை அணிந்திருந்தார்.
வழக்கமாக, இந்தியா கேட்டில் உள்ள மறைந்த போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் அவர், புதிதாக கட்டப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னத்தில், முதல்முறையாக மலரஞ்சலி செலுத்தினார்.