அயோத்தி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக நாளை (வியாழக்கிழமை) உத்தரபிரதேசம் செல்கிறார். இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
இதில் முக்கியமாக, ஜென்மாஸ்டமியை முன்னிட்டு வருகிற 29-ந்தேதி அயோத்தி ராம் லல்லா கோவிலில் ஜனாதிபதி வழிபாடு நடத்துகிறார். இதன் மூலம் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்யும் முதல் ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுகிறார். அத்துடன் அயோத்தியில் அவர் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கிறார். குறிப்பாக அனுமன் கார்கி கோவிலிலும் வழிபாடு நடத்தும் அவர், கனக பவனையும் பார்வையிடுகிறார்.
மேலும் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கட்டுமான பணிகளை ராம்நாத் கோவிந்த் பார்வையிடுகிறார். அத்துடன் அயோத்தி ராம் கதா பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள ராமாயண மேளாவை அவர் தொடங்கி வைக்கிறார்.
அயோத்தியில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதை கண்காணிப்பதற்காக இன்று (புதன்கிழமை) யோகி ஆதித்யநாத் அங்கு செல்கிறார்.