புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு புகழாரம் சூட்டினார். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டன.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் இரு சபைகளின் கூட்டு கூட்டம் நடந்தது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றினார்.
பேச்சின் தொடக்கத்தில் அவர், 21-ம் நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தின் (தசாப்தம் என்பது 10 ஆண்டு) தொடக்கத்தில் நடைபெறுகிற நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். உறுப்பினர்களுக்கு அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகைசெய்து மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து பரவலாக நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஜனாதிபதி, அந்த சட்டத்துக்கு புகழாரம் சூட்டினார்.
அப்போது அவர், குடியுரிமை திருத்த சட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இது நமது தேசப்பிதா மகாத்மா காந்தியின் விருப்பங்களை நிறைவேற்றி உள்ளது என்று கூறினார்.
இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள், வெட்கம், வெட்கம் என கோஷங் களை முழங்கினார்கள். வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளையும் தூக்கி காட்டினார்கள். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியபோது கூறியதாவது:-
காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் பிரிவு 370 மற்றும் 35 ஏ, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது மட்டுமின்றி, ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியவை சமமான வளர்ச்சி பெறுவதற்கு வழியாக அமைந்துள்ளது.
இந்த சபையின் வாயிலாக நான் ஜம்மு, காஷ்மீர், லடாக் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசின் முதல் 7 மாதங்களில் நாடாளுமன்றம், முக்கியத்துவம் வாய்ந்த பல சட்டங்களை இயற்றி உள்ளது.
இந்த 10 ஆண்டுகளை இந்தியாவின் 10 ஆண்டுகளாகவும், இந்த நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டுகளாகவும் ஆக்குவதற்கு எனது அரசு வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
5 லட்சம் கோடி டாலர் (சுமார் ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை ஆக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு எனது அரசு உறுதி கொண்டுள்ளது. இந்த இலக்கை அடைவதற்காக அரசு சம்மந்தப்பட்ட அனைவருடனும் எல்லா மட்டத்திலும் ஆலோசனை நடத்தி, முயற்சிகள் எடுத்து வருகிறது.
உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன. அன்னியச்செலாவணி கையிருப்பு வரலாற்று அளவாக 450 பில்லியன் டாலரை (சுமார் ரூ.31 லட்சம் கோடி) தாண்டி உள்ளது.
அன்னிய நேரடி முதலீடுகள் வரவும் அதிகரித்து வருகிறது.
நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும், ஊராட்சி மட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் வரையில், நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநில அரசையும், நாளைய சிறப்பான எதிர்காலத்துக்கு உள்நாட்டு பொருட் களை வாங்குங்கள் என்கிற தத்துவத்தை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு இந்தியரும் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன் படுத்துவதின்மூலம் உங்கள் பகுதிகளில் உள்ள சிறு தொழில்முனைவோருக்கு பெரிய அளவில் நீங்கள் உதவ முடியும் என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி உரையில் குறிப்பிட்ட பிற முக்கிய அம்சங்கள்:-
* பயங்கரவாதத்தில் ஈடுபடுவோருக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கு பாதுகாப்பு படைகளுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
* நாட்டில் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு 5 ஆண்டுகளில் ரூ.100 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது.
* கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு வரும் ஆண்டுகளில் அரசு ரூ.25 லட்சம் கோடியை செலவிட உள்ளது.
* தடை பட்டிருந்த வீட்டு வசதி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசு ரூ.25 ஆயிரம் கோடி நிதி வழங்கியதின் மூலம் நடுத்தர வர்க்கத்தினர் பலன் அடைவார்கள்.
இந்த தகவல்கள் ஜனாதிபதி உரையில் இடம்பெற்றிருந்தன.