புதுடெல்லி,
பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. வழக்கமான மானிய விலையுடன் கிடைக்கும் உணவு தானியத்துடன், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கொரோனா இரண்டாவது அலையையொட்டி, கடந்த மே, ஜூன் மாதங்களில் 3-ம் கட்டமாக இலவச உணவு தானியம் வினியோகிக்கப்பட்டது. 4-ம் கட்டமாக இத்திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.
இந்தநிலையில், 4-ம்கட்ட இலவச உணவு தானிய வினியோகம் தொடங்கியது. இதுகுறித்து மத்திய உணவுத்துறை செயலாளர் சுதன்சு பாண்டே கூறியதாவது:-
4-ம் கட்ட வினியோகத்துக்காக 1 கோடியே 98 லட்சம் டன் உணவு தானியம் ஒதுக்கப்பட்டுள்ளது. 7 மாநிலங்கள் இலவச வினியோகத்தை தொடங்கி விட்டன. ஜூலை 5-ந் தேதி வரை (நேற்று) 14 ஆயிரத்து 700 டன் உணவு தானியத்தை வினியோகித்துள்ளன. தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வினியோகம் தீவிரம் அடைந்துள்ளது.
கடந்த ஆண்டில் இருந்து இத்திட்டத்துக்கான செலவு ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் கோடி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.