புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனாவின் 2-வது அலை ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை பிரதமர் மோடி தீவிரமாக கண்காணித்து வருகிறார். ஒவ்வொரு மாநிலத்தின் நிலவரங்கள் தொடர்பாக அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுடனும், யூனியன் பிரதேச நிலவரங்கள் குறித்து துணை நிலை கவர்னர்களுடனும் தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
அந்தவகையில் கர்நாடகா, பஞ்சாப், பீகார், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநில முதல்-மந்திரிகளுடன் இன்று தனித்தனியாக தொடர்பு கொண்டு அந்தந்த மாநில நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
குறிப்பாக தொற்று பாதிப்பு, தடுப்பூசி போடும் பணிகள், தடுப்பு மருந்துகள் கையிருப்பு மற்றும் மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்த பிரதமர் மோடி, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விடுமாறும் முதல்-மந்திரிகளை அறிவுறுத்தினார்.
முன்னதாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்டோருடன் நேற்று பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.