தேசிய செய்திகள்

பஹ்ரைன் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு- ஈரான் தாக்குதலுக்கு கண்டனம்

வளைகுடா போர் தொடர்பாக பஹ்ரைன் மன்னருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.

புதுடெல்லி,

வளைகுடா பிராந்தியத்தில் உச்சக்கட்ட போர் நீடித்து வரும் நிலையில், பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபாவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மேற்கு ஆசிய நிலவரம் குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது வளைகுடா நாடுகளின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.மேலும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை உறுதி செய்வது முக்கியம் என வலியுறுத்திய பிரதமர் மோடி, கடல்வழிகளை பாதுகாப்பாகவும் திறந்தவையாகவும் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த உரையாடல் குறித்து பின்னர் தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறுகையில், “பஹ்ரைன் மன்னருடன் ஒரு இனிமையான உரையாடல் நிகழ்ந்தது. அப்போது அவருக்கும், பஹ்ரைன் மக்களுக்கும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்தேன். பஹ்ரைனில் வாழும் இந்தியர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக நன்றியும் தெரிவித்தேன்” என குறிப்பிட்டிருந்தார். மேற்கு ஆசிய பிராந்தியத்தின் தற்போதைய நிலை குறித்து விவாதித்ததாக கூறியுள்ள பிரதமர் மோடி, அங்கு எரிசக்தி மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் நடந்து வரும் தாக்குதல்களை கண்டித்ததாகவும் தெரிவித்துள்ளார்.