புதுடெல்லி,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் காமராஜர் திருவுருவச் சிலை மற்றும் உருவப் படத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
கே.காமராஜ் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம். இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகவும், சிறந்த பொதுவாழ்வு ஆளுமையாகவும் திகழ்ந்த அவர், தனது வாழ்வை தேசக் கட்டமைப்பிற்காக அர்ப்பணித்தவர். கல்வி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன் ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த உறுதியான அர்ப்பணிப்பு, எதிர்கால தலைமுறைகளுக்கு இன்றும் வழிகாட்டியாக திகழ்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.