வாரணாசி,
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். 4 லட்சத்து 79 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இது, கடந்த தேர்தலில் இருந்த வெற்றி வித்தியாசத்தை விட ஒரு லட்சம் ஓட்டுகள் அதிகம் ஆகும்.
2-வது தடவை வெற்றி பெற்ற பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு நேற்று சென்றார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் வாரணாசிக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம் நாயக், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் போலீஸ் பயிற்சி மைதானத்துக்கு சென்றார்.
அங்கிருந்து கார் மூலமாக கோவிலுக்கு மோடி புறப்பட்டார். ரோடு ஷோ பாணியில் அவர் வாகன அணிவகுப்புடன் சென்றார். சாலையின் இருமருங்கிலும் ஏராளமான மக்கள் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர். வீடுகளின் மொட்டை மாடியிலும் பலர் நின்றனர். அங்கிருந்து ரோஜா இதழ்களையும், பூக்களையும் வாகன அணிவகுப்பின் மீது தூவினர். நடன கலைஞர்களின் நிகழ்ச்சியும் நடந்தது.
பொதுமக்களின் வரவேற்புடன், பிரதமர் மோடி காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தார். பா.ஜனதா தலைவர் அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோருடன் கோவிலுக்குள் நுழைந்தார். அங்கு சிவபெருமானை வணங்கினார். சில பூஜைகளும் செய்தார். அர்ச்சகர்கள் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதி, சங்கு ஒலிக்கச் செய்தனர்.
பின்னர், வாரணாசியில் பா.ஜனதா ஊழியர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவர் பேசியதாவது:-
என்னை பெரும் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்த வாரணாசி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்குத்தான் நான் பிரதமர், உங்களுக்கு உங்களது எம்.பி., உங்களது சேவகன். மத்திய அரசின் திட்டங்களை கீழ்மட்டத்துக்கு கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய பா.ஜனதா ஊழியர்கள்தான் இந்த வெற்றிக்கு காரணம்.
அரசுக்கும், கட்சிக்கும் இடையே சிறப்பான இணக்கம் நிலவியது. அரசியல் கணக்கீடுகளையும் தாண்டி, கெமிஸ்ட்ரி இருப்பதை அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். என்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இருப்பினும், அரசியலில் தீண்டாமை உணர்வு நிலவி வருகிறது. மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில், சித்தாந்தத்துக்காக, பா.ஜனதாவினர் கொல்லப்படுகிறார்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.