லக்னோ,
உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. 5 கட்ட தேர்தல் முடிந்தநிலையில், இன்று 6-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 7-வது கட்ட தேர்தலுக்காக பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் சந்தவுலீ பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இன்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாங்கள் வாக்கு வங்கி அரசியல் செய்பவர்கள் அல்ல. நாங்கள் அரசின் நிதி உதவிகளை உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தியுள்ளோம்.
எங்கள் பாஜக கூட்டணி சந்தவுலீயில் உள்ள 14 ஆயிரம் ஏழை குடும்பங்களுடன் உள்ளது. அவர்களின் கனவை நிஜமாக்க நாங்கள் இரவு பகலாக உழைத்து வருகிறோம்.
ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் உத்தரபிரதேச மக்கள் பரிவார்வாடி கட்சிகளுக்கு(எதிர்க்கட்சிகள்) சரியான பதிலடி கொடுக்க முடிவெடுத்துள்ளனர். அது ஒவ்வொரு கட்ட தேர்தல் முடிந்த பிறகும் தெரிகிறது.
மக்கள் மார்ச் 10ம் தேதியன்று, அதாவது தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளன்று ஹோலி பண்டிகையை கொண்டாடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின், அவர் உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய உத்தரபிரதேச மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடினார். வாரணாசியில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வாரணாசி மற்றும் மநிலத்தின் பிற பகுதிகளை சார்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.