புதுடெல்லி,
நாட்டின் பெரிய மாநிலங்களான உத்தரபிரதேசம் (80 தொகுதி), மராட்டியம் (48 தொகுதி), மேற்கு வங்காளம் (42 தொகுதி), பீகார் (40 தொகுதி) ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் மொத்தம் 210 தொகுதிகள் இருக்கின்றன. எனவே, இந்த மாநிலங்களில் தீவிர கவனம் செலுத்தி, கூடுமானவரை அதிக தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. அதற்காக, மேற்கண்ட 4 மாநிலங்களில் மட்டும் மொத்தம் 42 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
உத்தரபிரதேசத்தில் 20 கூட்டங்களிலும், மராட்டியத்தில் 10 அல்லது 12 கூட்டங்களிலும், மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் தலா 10 கூட்டங்களிலும் அவர் பேசுகிறார்.
தனது முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறார். இன்று ஒரே நாளில் காஷ்மீர் மாநிலம் ஜம்முவிலும், உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரிலும், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டிலும் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
பிரதமர் மோடி நாளையும் (வெள்ளிக்கிழமை) 3 மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார்.
ஒடிசா மாநிலம் கோராபுட், தெலுங்கானா மாநிலம் மெகபூபா நகர், ஆந்திர மாநிலம் கர்னூல் ஆகிய ஊர்களில் நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.