புதுடெல்லி,
5 நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் மோடி, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக இந்தோனேஷியாவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். இதற்காக இன்று நண்பகல், தனி விமானம் மூலம் பிரதமர் மோடி ஜகார்த்தா புறப்பட்டுச்சென்றார். பிரதமர் மோடியை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.
இந்தோனேசியாவுக்கு மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இது. சிங்கப்பூரில் அவர் மேற்கொள்ள இருக்கும் 2-வது பயணம் இது. சிங்கப்பூர் பயணத்தின்போது, ஷாங்கிரி லா டயலாக் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தலைமை உரை ஆற்றுகிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்று தலைமை உரை ஆற்றுவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்த மாநாட்டில் பேசும்போது பிரதமர் மோடி, இந்திய பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு பற்றிய தனது நிலைப்பாட்டையும், கருத்துக்களையும் எடுத்துக் கூறுவார் என வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு) பிரித்தி சரண் தெரிவித்தார்.
இந்தோனேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே 70 ஆண்டு காலமாக ராஜ்யரீதியிலான உறவு உள்ளது. இந்தநிலையில் அங்கு செல்கிற பிரதமர் மோடி, அந்த நாட்டு அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேசுவார். இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி முன்னிலையில் இந்தோனேசியாவுடனும், சிங்கப்பூருடனும் இந்தியா பல ஒப்பந்தங்களை செய்து கொள்ளும்.