புதுடெல்லி,
2 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை தந்துள்ளார். பிரதமர் மோடியை சந்தித்த சார்லஸ், லண்டனில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தில்(CHOGM) கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
முன்னதாக, இன்று பிற்பகல் டெல்லி வந்து சேர்ந்த சார்லஸுடன் அவரது மனைவியும் இங்கிலாந்து இளவரசியுமான கமிலா பார்கர் பைவ்ல்ஸ் உடன் வந்தார். டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா தம்பதியினரை வெளியுறவு துறை இணையமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சிங்கப்பூர், மலேசியா, புருனே மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் 10 நாட்கள் பயண திட்டத்தின் ஒரு அங்கமாக சார்லஸின் இந்திய பயணம் அமைந்தது. சார்லஸின் வருகை இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில் அமையும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. இங்கிலாந்து நாட்டில் வரும் ஏப்ரல் நடைபெற உள்ள CHOGM மாநாட்டில், பருவநிலை மாறுபாடு, நீடித்தவளர்ச்சி மற்றும் இலக்கு, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.