புதுடெல்லி,
குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம்(டிசம்பர்) 9 மற்றும் 14-ந்தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. அங்கு இப்போதே தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. பா.ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷாவும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ராகுல்காந்தியை சின்னப் பையன் என்று கேலியாக வர்ணிக்கும் விதமாக பப்பு என்ற இந்தி வார்த்தையை பயன்படுத்தி பிரசார விளம்பரத்தை தயாரித்து அதை டெலிவிஷனில் ஒளிபரப்புவதற்கு தேர்தல் கமிஷனின் அனுமதியை பா.ஜனதா கோரி இருந்தது. அதேநேரம் பா.ஜனதா ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் இந்த வார்த்தைய பயன்படுத்தி ராகுல்காந்தியை கிண்டல் செய்தனர்.
இதில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் தெரிவித்தது. இதையடுத்து குறிப்பிட்ட அந்த வார்த்தையை நீக்கும்படி தேர்தல் கமிஷன் மாநில பா.ஜனதாவுக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த வார்த்தையுடன் விளம்பரம் வெளியிடுவதற்கு தடையும் விதித்தது.
இதனால், அந்த வார்த்தையை பிரசார விளம்பரத்தில் இருந்து பா.ஜனதா நீக்கியது. அதற்கு பதிலாக வேறு வார்த்தை பயன்படுத்தப்பட்டு இருப்பதாக மாநில பா.ஜனதாவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.