காசியாபாத்,
நாட்டில் விவசாயிகளின் நலன்களை முன்னிட்டு மத்திய அரசு வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இடைத்தரகர்கள் தேவையின்றி நேரடியாக விவசாயிகளின் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதற்கான வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வேளாண் சட்டங்கள் கொண்டிருந்தபோதிலும், இதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெற கோரியும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் ஒரு பகுதியாக வடபகுதியில் உள்ள அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணி செல்வது என முடிவெடுத்தனர்.
இதன்படி, அவர்களது டெல்லிய நோக்கிய பேரணி கடந்த 26ந்தேதி காலை தொடங்கியது. அவர்கள், டிராக்டரிலும் மற்றும் நடந்தும் குழுக்களாக பிரிந்து பேரணிக்கு புறப்பட்டு சென்றனர்.
பேரணியின் முதல் நாளிலேயே விவசாயிகளில் சிலர், பாலத்தின் நடுவே வைக்கப்பட்டு இருந்த தடுப்பான்களை தூக்கி பாலத்திற்கு கீழே எறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போகும்படி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனை மீறியவர்களை நோக்கி தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.
பேரணிக்கு சென்றவர்கள் அன்றிரவு சுங்க சாவடியருகே படுத்து உறங்கினர். 2வது நாள் இரவில் புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் படுத்து உறங்கினர். இதற்கான ஏற்பாடுகளை டெல்லி அரசு செய்திருந்தது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் 3வது நாளாகவும் போராட்டம் தொடர்ந்தது. புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு டெல்லி போலீசாரும் அனுமதி வழங்கியுள்ளனர். நேற்று 4வது நாளாகவும் போராட்டம் நீடித்தது.
இதன்பின்பு இரவில் டெல்லி மற்றும் உத்தர பிரதேச எல்லை பகுதியான காஜிப்பூர் மற்றும் காசியாபாத் பகுதியில் விவசாயிகள் சிலர் படுத்து உறங்கினர். ஆனால், சிலர் இரவு நேரத்திலும் அமர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.