அமராவதி,
ஆந்திர மாநில தலைநகராக அமராவதி உள்ளது. இதனை சட்டசபை தலைநகராக வைத்துக்கொண்டு, நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம், நீதித்துறை தலைநகராக கர்னூல் என 3 தலைநகரங்களை உருவாக்க அங்கு ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு அமராவதியை உருவாக்க நிலம் கொடுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் 3 தலைநகர் அமைப்பதற்கான மசோதா ஆந்திர சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அப்போது, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சியை மேற்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி சட்டசபையை முற்றுகையிட முயன்றனர். அப்போது கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் தலைநகர் ஸ்தம்பித்தது.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் எதிர்க்கட்சிகள், விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் நேற்று பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
மேலும் போராட்டத்தை ஒடுக்க எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் சிலரையும் ஆந்திர அரசு வீட்டுக்காவலில் வைத்திருந்தது. ஆனால் தடையையும் மீறி எதிர்க்கட்சிகள், விவசாயிகள் நேற்றும் தொடர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் ஆந்திராவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.