புதுடெல்லி,
டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் 40 விவசாய சங்கங்கள் இணைந்த அமைப்பு, சம்யுக்தா கிசான் மோர்ச்சா. வேளாண் சட்டங்கள் ரத்து பற்றிய பிரதமர் மோடி அறிவிப்பு குறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் பிரதமரின் அறிவிப்பை வரவேற்கிறோம். ஆனால், முறையான நாடாளுமன்ற நடவடிக்கைகள் மூலம் கார்ப்பரேட்டுக்கு ஆதரவான இந்த கருப்பு சட்டங்கள் ரத்தாகும்வரை பொறுத்திருந்து பார்ப்போம். அப்படி நடந்தால், இது விவசாயிகளின் ஓராண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.
வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்காக மட்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தவில்லை. அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும், அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டபூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கை நிலுவையில் உள்ளது.
மின்சார திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது. இதுபற்றிய நிகழ்வுகளை கவனித்து வருவோம். கூட்டம் நடத்தி, எங்கள் அடுத்தகட்ட முடிவை அறிவிப்போம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்களில் முக்கிய சங்கமான பாரதீய கிசான் சங்கத்தின் தேசிய செய்தித்தொடர்பாளர் ராகேஷ் திகாயத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வேளாண் சட்டங்கள் ரத்து பற்றிய அறிவிப்பு வெளியானதற்காக, உடனடியாக போராட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம். நாடாளுமன்றத்தில் இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படும்வரை காத்திருப்போம். அதன்பிறகுதான் போராட்டம் வாபஸ் பெறப்படும். அதற்கு முன்பு, குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் விவசாயிகளின் இதர கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.