தேசிய செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் 'அமேசோனியா - 1' செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக் கோள், இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் மற்றும் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.