புதுச்சேரி,
புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று காலை தனது துறை தொடர்பான கோப்புகள் குறித்து பேச கவர்னர் கிரண்பெடி நேரம் ஒதுக்கி தராததை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதை அறிந்த முதல்-அமைச்சர் நாராயணசாமி சட்டசபையில் இருந்து அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 2 பேருடன் புறப்பட்டார். வர்த்தக சபை வழியாக அவர்கள் நடந்தே வந்தனர். குபேர் சிலை அருகே வந்தபோது போலீசாரும், துணை ராணுவப்படையினரும் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினார்கள். அமைச்சரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களுடன் வந்தவர்கள் போலீஸ், துணை ராணுவப்படையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளையும் தள்ளிவிட்டதை தொடர்ந்து தள்ளுமுள்ளுவில் இறங்கினர்.
மோதலில் ஈடுபட்டவர்களை நாராயணசாமி சமரசப்படுத்தினார். இதன்பின் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரின் நடவடிக்கையை கண்டித்து நடுரோட்டில் அமர்ந்து அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவல் கிடைத்து காங்கிரசார் திரண்டு வந்து சேர்ந்து கொண்டனர்.
அங்கு கவர்னர் கிரண்பெடிக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். கவர்னரே திரும்பிப்போ என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளையும் கைகளில் ஏந்தியிருந்தனர். மாலை 4 மணியளவில் அங்கு போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமியை மட்டும் அமைச்சர் கந்தசாமியை சந்திக்க அழைத்து சென்றனர். மற்றவர்கள் அனைவரும் அங்கேயே அமர்ந்திருந்தனர். கவர்னர் மாளிகை முன்பு சென்ற நாராயணசாமி அமைச்சர் கந்தசாமியை சந்தித்து பேசினார்.