பயணிகள் ரெயில்
புதுவை எம்.பி. வைத்திலிங்கம் நேற்று ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ரெயில் நிலைய கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் புதுவை ரெயில் நிலையத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி- விழுப்புரம் இடையேயான பயணிகள் ரெயிலை இயக்க அரசு உடனடியாக அனுமதிக்க வேண்டும். சரக்கு ரெயில் போக்குவரத்தும் தொடங்கப்பட வேண்டும்.கடந்த காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரி துறைமுகம், எண்ணூர் துறைமுகத்துடன் சேர்ந்து சரக்கு கப்பல் சேவை தொடங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அரசியல் காரணங்களால் அது நிறைவேற்றப்படவில்லை.தற்போது புதுச்சேரியிலும், மத்தியிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் உள்ளது. எனவே சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பான ஒப்பந்தத்தை புதுப்பித்து உடனே தொடங்கவேண்டும்.
பள்ளி கட்டணம்
தனியார் பள்ளிகள் பிற கட்டணங்களை தவிர்த்து கல்விக்கட்டணத்தை மட்டும் 75 சதவீதத்தை வசூலிக்க சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால் அதற்கு முன்பே 100 சதவீத கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலித்துவிட்டன. எனவே
கூடுதலாக வசூலித்த 25 சதவீத தொகையை பெற்றோருக்கு திரும்ப கிடைக்க செய்ய வேண்டும்.புதுவையில் அமைச்சர்கள் இருக்கிறார்களா, இல்லையா? என தெரியவில்லை. தற்போது பதவி ஏற்றுள்ளனர். ஆனால் யாருக்கும் எந்த
துறையும் பிரித்து கொடுக்கப்படவில்லை.உலகம் முழுவதும் வேலையில்லா இளைஞர்கள், தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் புதுச்சேரியில் தான் வேலையில்லா அமைச்சர்களும் உள்ளனர். எனவே இந்த விஷயத்தில் கவர்னர் தலையிட்டு அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்கீடு செய்துதர வேண்டும்.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.