புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி பிரதமர் நரேந்திர மோடிக்கு காவிரி விவகாரம் தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
காவிரியில் 7 டி.எம்.சி. தண்ணீர் காரைக்காலுக்கு வழங்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு அமைக்கவேண்டியது அவசியம். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பினை 6 வாரத்துக்குள் நிறைவேற்ற செயல் திட்டத்தினை உருவாக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு தாக்கல் செய்துள்ள விளக்கம் கேட்கும் மனுவால் காலதாமதம் ஏற்படும் என்பதால் காரைக்கால் விவசாயிகளிடையே பதற்றத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவினை காலதாமதமின்றி அமைக்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவாக அமைக்க நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய புதுச்சேரி அரசு நிர்வாகத்துக்கு நான் அனுமதி அளித்துள்ளேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
இந்த கடிதத்தின் நகல்களை உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்காரி, புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.