தேசிய செய்திகள்

ரபேல் போர் விமான ஒப்பந்தம்: ராணுவ மந்திரி உண்மைகளை மறைக்கிறார் ஏ.கே.அந்தோணி குற்றச்சாட்டு

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ராணுவ மந்திரி உண்மைகளை மறைக்கிறார் என ஏ.கே.அந்தோணி குற்றச்சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரான்சிடமிருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இதை மத்திய அரசும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இதுபற்றி முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2013ம் ஆண்டு 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் எனது தலையீடு இருந்ததாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளது முற்றிலும் தவறான தகவல்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வாங்குவதற்கு ஒப்புக்கொண்ட விலையை விட ரபேல் போர் விமானத்தை குறைந்த விலைக்கு வாங்கிட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக ராணுவ மந்திரி கூறுகிறார். அப்படியென்றால் நீங்கள் ஏன் 126 ரபேல் விமானங்களை வாங்காமல் 36ஐ மட்டும் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தீர்கள்?... இதனால் நாட்டு மக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, நாங்கள் ஒரு விமானத்தை வாங்கிட ஒப்பந்த செய்துகொண்ட தொகையையும், நீங்கள் வாங்குவதற்கு செய்து கொண்டுள்ள விலை பற்றியும் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.

மேலும் இப்பிரச்சினை பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட மத்திய அரசு தயங்குவது ஏன்?... ராணுவ மந்திரி இந்த விவகாரத்தில் உண்மையான தகவல்களை மறைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து