தேசிய செய்திகள்

‘ரபேல்’ போர் விமான விவகாரம் குறித்து வழக்கு பதியவோ, சி.பி.ஐ. விசாரணை நடத்தவோ முடியாது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்

‘ரபேல்’ போர் விமான விவகாரம் குறித்து வழக்கு பதிவது, சி.பி.ஐ. விசாரணை நடத்துவது என்பது பற்றிய கேள்விக்கே இடமில்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, இதுபற்றி விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை சந்தேகிக்க எதுவும் இல்லை என்று கூறி, கடந்த டிசம்பர் 14-ந் தேதி, அவர்களின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த ஆவணங்களின் அடிப்படையில், யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர். ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், வக்கீல் வினீத் தாந்தா ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்ததால், தீர்ப்பை ஒத்திவைத்து, கடந்த 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இருதரப்பினரும் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யலாம் என்றும் கோர்ட்டு கூறியிருந்தது.

அதன்படி, மத்திய அரசு 39 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வமான வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒப்பந்தத்தின் 3 முக்கிய அம்சங்களான முடிவெடுக்கும் பணி, விலை, இந்திய பங்குதாரர் தேர்வு ஆகியவற்றில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முகாந்திரம் எதுவும் இல்லை என்று கடந்த டிசம்பர் 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு கூறிவிட்டது. அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்கான நியாயமான காரணம் எதையும் மனுதாரர்கள் கூறவில்லை.

மறுஆய்வு கோருதல் என்ற போர்வையில், ரகசிய கோப்புகளில் இருந்து பிரதி எடுக்கப்பட்ட ஆவணங்கள், பத்திரிகை செய்திகள் ஆகியவற்றை நம்பி, இந்த விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்ய கோர முடியாது. இது, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சி.

விலை விஷயத்தை ஆய்வு செய்த தணிக்கை குழு, 2.86 சதவீதம் விலை குறைவாகவே விமானங்கள் வாங்கப்படுவதாக கூறியுள்ளது. மனுதாரர்களின் வாதத்தை நிராகரித்துள்ளது. ரபேல் விமானம் வாங்கும் ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருவதை சந்தேகத்துக்கு உள்ளாக்கினால், அது இந்திய விமா னப்படைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆகவே, இந்த விவகாரம் குறித்து முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்வது அல்லது சி.பி.ஐ. விசாரணை நடத்துவது பற்றிய கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு மத்திய அரசு கூறியுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு