புதுடெல்லி,
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமீபத்தில் விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்து பேசினார். அதற்கு நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:-
ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மக்களவையில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்த விவாதத்தின் போது காங்கிரஸ் கட்சி எழுப்பிய அடிப்படை கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கவில்லை. ரபேல் ஒப்பந்த ஊழல் குற்றவாளியான பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் பதிலளிப்பதை தவிர்த்து வருகிறார்.
அவரிடம் சில அடிப்படை கேள்விகளை கேட்க விரும்புகிறேன். அதாவது ரபேல் விமானத்தின் விலையை ரூ.526 கோடியில் இருந்து ரூ.1600 கோடியாக உயர்த்தியது யார்? அது விமானப்படையா? ராணுவ அமைச்சகமா? அல்லது பிரதமரா?
ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க வேண்டாம் என சுப்ரீம் கோர்ட்டு சொல்லவில்லை. அது தங்களின் அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல என்று மட்டுமே கூறியிருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்கப்பட வேண்டும்.
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து குற்ற விசாரணை நடத்தப்படும். இதில் தவறிழைத்தவர்கள் அனைவரின் பெயரும் வெளியிடப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.