புதுடெல்லி,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று டெல்லியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு தனி விமானம் மூலம் வந்து கொண்டிருந்தார். ஹூப்ளி அருகே அவரது விமானம் தரையிறங்குவதற்கு முன் திடீரென தாழ்வாகவும் பின்னர் ஒரு பக்கமும் சாய்வாகவும் சென்று தடுமாறியது. வானிலை தெளிவாக இருந்த போதும் விமானத்தில் ஏற்பட்ட இந்த கோளாறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழிநுட்ப கோளாறு காரணமக இந்த சம்பவம் ஏற்பட்டது என கூறப்பட்டாலும், இந்த சம்பவத்தில் சதி வேலை இருந்து இருக்கலாம் என சந்தேகத்தை காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. விமானி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விமானம் தானியங்க முறையில் (ஆட்டோமேஷன் மோட்) இருக்கும் போது கோளாறு ஏற்படுவது வழக்கத்திற்கு மாறானது இல்லை என விமான போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்து உள்ளது. விமான போக்குவரத்து ஒழுங்கு முறை இயக்குநரக தலைவர் பிஎஸ் புல்லர், கூறும் போது, ஆபரேட்டர் இந்த சம்பவம் பற்றி எங்களுக்கு தகவல் அளித்தார்.
ஆட்டோமோட் முறையில் இருந்து மேனுவல் முறைக்கு மாற்றும் போது கோளாறு ஏற்பட்டதாகவும் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த முறையின் போது பிரச்சினை ஏற்படுவது வழக்கத்திற்கு மாறானது இல்லை. எந்த ஒரு முக்கிய பிரமுகர் விமானமாக இருந்தாலும், விமான போக்குவரத்து இயக்குநரகம் முழுமையாக ஆய்வு செய்யும். அதே முறையை இந்த விஷயத்திலும் செய்வோம். இவ்விவகாரத்தில் விரிவான அறிக்கை இரண்டு வாரங்களில் வெளியாகும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.