புதுடெல்லி,
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. மும்பை, பெங்களூரு, ஐதராபாத் என நாட்டின் முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது.
தமிழகத்திலும் பெட்ரோல் விலை ரூ.100-ஐ நெருங்கி விற்பனை செய்யப்படுகின்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், எரிபொருள் விலை தொடரந்து உயர்த்தப்படுவதற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, விதிவிலக்காக அரிதான சில நாளில் இந்திய அரசு எண்ணெய் விலை உயர்த்தாது என்பது விலை உயர்வு தினமும் இருக்கும் என்ற விதியை நிருபிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மோடி அரசின் வளர்ச்சியின் நிலை என்பது, ஏதாவது ஒருநாளில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படவில்லை என்றால் அது மிகப்பெரிய செய்தியாக மாறியிருப்பதுதான் எனவும் ராகுல் காந்தி சாடியுள்ளார்.