புதுடெல்லி,
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும், காஷ்மீரை சேர்ந்த தேசிய மாநாடு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி தலைவர் சகத் லோன் உள்ளிட்ட தலைவர்கள் தொடர்ந்து வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், காஷ்மீருக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று (சனிக்கிழமை) செல்ல உள்ளனர்.
காங்கிரஸ் சார்பில் குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு டி.ராஜா, தி.மு.க.வை சேர்ந்த திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதாதளம் மனோஜ் ஜா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தினேஷ் திரிவேதி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று மதியம் டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றனர். காஷ்மீர் சென்றடையும் இவர்களுடன் ராகுல்காந்தியும் இணைந்து கொள்வார் என தெரிகிறது.
ஏற்கனவே காஷ்மீருக்கு 2 முறை செல்ல முயன்ற குலாம்நபி ஆசாத் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் மக்களை கட்டுப்பாடுகள் இல்லாமல் சந்திக்க அனுமதித்தால் அங்கு வரத்தயார் என ராகுல்காந்தி அறிவித்து இருந்தார்.