நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது, லடாக்கில் சீன ஆக்கிரமிப்பு குறித்து அவர் பேசினார். முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே எழுதி வெளிவராத ஒரு புத்தகத்தைப் பற்றிய கட்டுரையை இதழ் ஒன்று வெளியிட்டிருந்தது. அந்த இதழ் கட்டுரையை கையில் ஏந்தியபடி ராகுல் காந்தி பேசத் தொடங்கினார்.
ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராகுல் காந்தி அந்த புத்தகத்தை காட்டி பேசத் தொடங்கியதும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆட்சேபம் தெரிவித்தார். வெளிவராத புத்தகத்தை அவையில் காட்டி பேசுவது விதிகளுக்கு எதிரானது என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
ராகுல் காந்திக்கு ஆதரவாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவும் கோதாவில் குதித்தார். அகிலேஷ் யாதவ் பேசுகையில், “சீனா தொடர்புடைய விவகாரம் மிகவும் தீவிரமான ஒன்றாகும். மக்களவையில் பேச அனுமதிக்க வேண்டும்” என்றார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்களவையை பிற்பகல் 3 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.