புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரியில், போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜனதாவினர் சென்ற கார்கள் மோதியதில் 4 விவசாயிகள் பலியானார்கள். மோதிய கார்களில் ஒன்றில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் இன்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலை 10 மணி தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை 4 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த அமைப்பான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அமைப்பு, லகிம்பூர் கேரி வன்முறைக்கு நீதி கோரி இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளது. அஜய் மிஸ்ரா பதவியில் இருக்கும் வரை லகிம்பூர் கேரி வன்முறையில் நீதி கிடைக்கப்போவது இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.